21 January, 2018

முதல் வேட்டையும் முதல் கொலையும்! - நக்கீரன்


நக்கீரன் பத்திரிகையின் முதல் நூல் இது.

நக்கீரன் நிருபர்கள் வீரப்பனை பல மணி நேரங்கள் எடுத்த பேட்டி, நூல் வடிவமாக வெளியிடப்பட்டுள்ளது. புத்தகத்தில் சில படங்கள் மட்டும் கலர் படமாக உள்ளது. அனைத்து படங்களும் கலர் படமாக இருந்தால் நன்றாக இருக்கும். இடது கரை வரும் பக்கங்களில் வீரப்பனின் சிறிய படத்தை போட்டுள்ளதால் பக்கத்தின் விளிம்பு அதிகமாக உள்ளது. இதை தவிர்த்திருந்தால் பக்கங்கள் குறைந்திருக்கும்.

சில மாதங்களுக்கு முன் Veerappan: Chasing the Brigand என்ற புத்தகத்தை படித்தேன். இந்த புத்தகத்தை படிக்கும் பொழுது எனக்கு விருமாண்டி படம் நினைவுக்கு வருகிறது. பசுபதியின் பார்வை போல் Veerappan: Chasing the Brigandம், கமலின்  பார்வை போல் இந்த புத்தகமும் உள்ளது.

"வீரப்பன் எங்களுக்கு முதல் எதிரி என்றால் நக்கீரன்தான் அடுத்த எதிரி" என்று தேவாரம் வெளிப்படையாகவே பேட்டி கொடுத்ததுடன், காட்டுக்குள் நக்கீரன் நிருபர்களை கண்டால் சுட்டுத்தள்ளுங்கள் என்று அதிரடிப்படைக்கு வாய்மொழி உத்தரவும் போட்டிருந்தார் (பக்கம் 26).

அதிரடிப்படையால் அப்பாவி மக்களை துன்புறுத்துகின்ற இடம்தான்  ஒர்க்ஷாப். அந்த சித்ரவதைகள் சோளகர் தொட்டி என்ற புத்தகத்தில் விவரமாக எழுதப்பட்டுள்ளது.

நக்கீரன் நிருபர் சிவா அவர்கள் வீரப்பனுடன் 5 நாட்கள் தங்கியிருந்து 9 மணி நேரம் ஓடக்கூடிய அளவுக்கு வீடியோ பேட்டி எடுத்துள்ளார். இந்த பேட்டி, 1996ம் ஆண்டு ஏப்ரல் 7ந் தேதியன்று வீரப்பனுடன் நேருக்கு நேர் என்று சன் டிவியில் ஓளிபரப்பப்பட்டுள்ளது.

வீரப்பன் 13 வயதிலே துப்பாக்கியை எடுத்து 14 வயதில் பயங்கர வேட்டைக்காரனாகியுள்ளான்.

"வெறும் 11 மாசம் தான் சந்தன மரம் ஓட்டினேன். ஆனால் பேரு மட்டும் இப்படியாகிப்போச்சு. அதில என்ன வந்திருக்கும்...ஒரு கோடி ரூபாய் வந்திருக்கும் எல்லாம் ஜனங்களுக்குத்தான் கொடுத்தேன். அவ்வளவுதான் பல வருஷம் ஓட்டி, பல ஆயிரக்கணக்கான கோடிகளை சம்பாரிச்சவன் எல்லாம் சம்பாதிச்சான். ஒரு மசிருமில்லை. வேணும்னா பேரு மட்டும் கிடைச்சுது. (பக்கம் 101)

Veerappan: Chasing the Brigand என்ற புத்தகத்தில், மக்களுக்காக நிதி திரட்டியும், தான் பெரிய தொகையை கொடுத்தும், கோபிநத்தத்தில் ஒரு கோவிலை DFO சீனிவாசன் கட்டினார் என்று ஆசிரியர் புகழ்ந்துள்ளார். ஆனால், இந்த புத்தகத்தில், உண்மை வேறு விதமாக உள்ளது. ஒவ்வொரு பட்டிக்கும் சென்று ரெண்டு ஆடுகளை மிரட்டி வாங்கி, ஏலம் விட்டு அந்த பணத்தை வைத்து கோயில் கட்டியுள்ளார் என்று கூறப்பட்டுள்ளது. வீரப்பன் பேசும் பொழுது பாதகத் துரோகிகள் என்று கூறுவது ரசிக்கும்படியாக உள்ளது.

ஆயிரம் யானையை தசரதன் கொன்றான் என்ற கதையை இதுவரை எங்கும் படித்ததில்லை. வீரப்பனின் பேட்டியின் மூலம் தெரிந்து கொண்டுள்ளேன்.

No comments:

Post a Comment