எனது தந்தைக்கு ஜாதகத்தில் நாட்டம் அதிகம். சென்னை புத்தக கண்காட்சியில் அவருக்காக இந்த புத்தகத்தை வாங்கினேன். நடிகர் ராஜேஷ் தனது சொந்த அனுபவங்களை கூறி பின் அதில் உள்ள சந்தேகங்களையும் எதிர் கேள்விகளையும் எடுத்து வைக்கிறார். உதாரணமாக, எப்பொழுது தர்மம் அழிகிறதோ அப்பொழுது கிருஷ்ண பரமாத்மா அவதரிப்பார். இப்பொழுது ஏன் அவதரிக்கவில்லை?
தாம்பரத்தில் நாடி ஜோதிட நிலையம் தொடங்கப்பட்ட பொழுது இவர்தான் சிறப்பு விருந்தினராக வந்து திறந்து வைத்துள்ளார். இதை படித்தவுடன், சுமார் 8 வருடங்களுக்கு முன்பு நான் சென்ற அனுபவம் ஞாபகத்திற்கு வந்தது. எனது பெயர் நாடியில் உள்ளதா என்று தெரிந்து கொள்ள சென்றேன். எனது பெயர் வந்தவுடன் சந்தோஷமாக இருந்தது. சிறிது நேரம் யோசித்த பிறகு, நாடி பார்ப்பவர் என்னிடம் கேட்ட பல கேள்விகள் மூலம் கண்டு பிடித்துள்ளார் என்று அறிந்து கொன்டேன். ரூ. 500ம் ஒரு முழு நாளும் விரயம். ஆனால் நடிகர் ராஜேஷிற்கு தனது இயற்பெயரான சாமுவேல் ராஜேஷ் என்று நாடியில் வந்தது ஆச்சரியமாக உள்ளது. கிறித்துவர்கள் மூட நம்பிக்கைகளை வெறுப்பர். இவர் எப்படி ஜோதிடம் பற்றி 1983இல் இருந்து ஆராய்ந்துள்ளார்?
எனது கல்லூரி நண்பனும் நாடி பார்க்க சென்றான். அவன் வேலை நிமித்தமாக வெளி நாட்டிற்கு செல்வான் என்று வந்தது. அவனும் என்னை போல் ஏமாந்ததாக எண்ணினான். இப்பொழுது அவன் வெளிநாட்டில் இருக்கிறான்!!!
கிருஷ்ணர் கோடி சுற்றி பிறந்ததால் கம்சன் அழிந்தான் என்ற கருத்து சற்று வியப்பாக உள்ளது.
ராக்கியாக் கவுண்டர் என்பவர் பஞ்சமாசித்தி பெற்றவர். அவர் இறக்கும் போது வயது 33. அவர் கூறிய கணிப்பு:
"எனக்கு பிறக்க போவது ஒரு ஆண் குழந்தை. அவன் பிறந்த ஒரு வருடத்திற்குள் இறந்து விடுவேன். அப்படி நான் இறக்கவில்லை என்றால், அவன் எனக்கு பிறந்தவனில்லை. அவர் கணித்த மாதிரி தனது மகன் பிறந்த 10வது மாதத்தில் மரணமடைந்தார்."ராக்கியாக் கவுண்டர் நடிகர் சிவகுமாரின் தந்தை.
செட்டிநாட்டு வழக்கப்படி வேறு சாதியில் திருமணம் செய்தால் சாதிக்கட்டுப்பாடு விதித்து விலக்கி வைத்து விடுவார்களாம்.ரோபோ சங்கர் வேறு வகுப்பைச் சார்ந்த பெண்ணை காதல் திருமணம் செய்ததால் தனது தாயின் ஈமக்கிரியையில் கலந்து கொள்ள முடியவில்லை. இந்த சம்பவமும் ஜாதகத்தின் மூலம் கணித்துள்ளனர்.
தனது சிறு வயது போட்டோவில், கையில் ஒரு புத்தகத்துடன் போஸ் கொடுத்துள்ளார். இப்பொழுதும் தனது கையில் ஏதோ ஒரு புத்தகம் இருக்குமாம்.
இந்த புத்தகத்தை படித்தவுடன் மறுபடியும் நாடி பார்க்க வேண்டும் என்று எண்ணம் வந்துவிட்டது.